"ராவணனை வீழ்த்திய ராமனை போல், ஒன்றிய ஆட்சியை வீழ்த்துவார் ஸ்டாலின்"-அமைச்சர் ரகுபதி

"ராவணனை வீழ்த்திய ராமனை போல், ஒன்றிய ஆட்சியை வீழ்த்துவார் ஸ்டாலின்"-அமைச்சர் ரகுபதி
"ராவணனை வீழ்த்திய ராமனை போல், ஒன்றிய ஆட்சியை வீழ்த்துவார் ஸ்டாலின்"-அமைச்சர் ரகுபதி

ராமாயணத்தில் பத்து தலை உள்ள ராவணனை ஒரு தலை கொண்ட ராமன் வென்றது போல், மக்கள் விரோத மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் முக.ஸ்டாலின் வலுவான கூட்டணியை ஒருங்கிணைத்து, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் திமுக சார்பில் பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை வகித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை விட்டுப் போகும்பொழுது வெறும் டெண்டர் ஆக வைத்து விட்டு போய் உள்ளார். கமிஷன், கரப்சன், கலெக்ஷனில் மன்னனாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் டெண்டர் வைத்துவிட்டு சென்ற பணத்தையும் இப்பொழுது திமுக தான் சரி செய்துவருகிறது. எடப்பாடியாரின் வாக்கு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. திமுக அரசை விட்டால் வேற அரசு நல்ல ஆட்சி அமைக்க முடியாது என மக்களின் மனநிலை மாறிவிட்டது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, திமுக அரசின் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலே சான்றாக மாறியுள்ளது.

மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் மிக்க தலைவராக தமிழக முதலமைச்சர் தான் திகழ்கிறார். ராமாயணத்தில் பத்து தலை உள்ள ராவணனை, ஒரே தலை உள்ள ராமன் வென்றது போல், பத்து தலை ராவணாக இருக்கக்கூடிய மத்திய அரசை முக. ஸ்டாலின் தலைமையில் அமையக்கூடிய கூட்டணி நிச்சயமாக வெற்றி கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

திமுக அரசு பல நன்மைகளை செய்துவருவதற்கெல்லாம் ஒன்றிய அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. அந்த முடுக்கட்டை தான் ஆளுநர். ஆட்டிற்கு உள்ள தாடி எதற்கும் உபயோகப்படாது, அதுபோல மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு என அண்ணா கூறினார். அதுபோல அதனை இன்றைய பல ஆளுநர்கள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆசையைக் காட்டி பணத்தை புடுங்குகிறார்கள். அதனால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மக்களுடைய நன்மைக்காக அனுப்புகின்றோம். அதை புரிந்து கொள்கின்ற தன்மை ஆளுநருக்கு இல்லை. ஆளுநரின் இந்த செயலிற்கு யார் அதிகாரத்தை கொடுத்தது என ஆளுநரிடம் கேட்கிறேன். ஏற்கனவே புதிய சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியதை ஆளுநர் கவனிக்க மறந்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும் மீண்டும் அந்த சட்டம் இயற்றப்படும். அதனை ஆளுநருக்கு அனுப்பி சரியான ஒப்புதல் பெறப்படும். இந்த சட்டத்தின் மூலமாக இணைய வழி சூதாட்டத்தில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவோம். இதற்கு இந்த தமிழக அரசு முழுவீச்சில் செயல்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com