“மின்வாரிய தனியார்மயத்தை உடனே கைவிடுக’’ - மு.க.ஸ்டாலின்

“மின்வாரிய தனியார்மயத்தை உடனே கைவிடுக’’ - மு.க.ஸ்டாலின்

“மின்வாரிய தனியார்மயத்தை உடனே கைவிடுக’’ - மு.க.ஸ்டாலின்
Published on

மின்வாரியத்தின் ஒரு பகுதியை திட்டமிட்டு தனியாருக்கு தாரை வார்ப்பதா? என திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “'யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து ஒளித்து வை' என்பது போல, மின்மிகை மாநிலம் என்று எந்தச் செயல்முறை அடிப்படையும் இல்லாமல், தனக்குத்தானே வீண் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும், அதன் மின்துறை அமைச்சரும், பல கோடிக்கணக்கில் ஊழல் செய்வதற்காக, மின்வாரியத்தின் ஒவ்வொரு பகுதியாகத் திட்டமிட்டுத் தனியாருக்குத் தாரைவார்த்து வரும் நிலையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவிலும் மண் அள்ளிப்போடும் மாபாதகச் செயல் அரங்கேறுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இதனைக் கண்டித்து தொ.மு.ச. உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தினர் அனைவரும் தமிழகம் தழுவிய அளவில் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.கழகம் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வழங்குகிறது.

புதிய துணை மின் நிலையங்களைத் தனியாருக்கு 2 ஆண்டுகால ஒப்பந்தத்தில் தாரைவார்த்துள்ள ஆட்சியாளர்கள், தமிழகம் முழுவதும் உள்ள 650 மின் விநியோக உபகோட்டங்களில் உள்ள பணிகளுக்கு, அவசர அவசரமாக ஒரு கோட்டத்திற்கு 1 கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்க்கு உள்நோக்கத்துடன் ஒப்பந்தம் போடுவது, மின்சாரத் தாக்குதலுக்கு ஒப்பான அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த ‘ஹைவோல்ட்’ அதிர்ச்சியின் பின்னணியில் இருப்பது, தனியார் நிறுவனங்களுடன் ஆட்சியாளர்கள் நடத்தியுள்ள பேரமும், அதனால் ஐ.டி.ஐ. படித்த தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு அநியாயமாகப் பறிபோவதும்தான். மின்வாரியத்தில் ஏற்கனவே பணியில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 380 ரூபாய் தினக்கூலியைத் தர மறுக்கும் தமிழக அரசு, தனியாரிடம் தினக்கூலிக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ.412 என அதிகப்படுத்தி ஒப்பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன?

தனியார் மூலமாக அனுபவமில்லாத பணியாளர்களைக் குறைவான கூலிக்கு ஒப்பந்தம் செய்யும்போது, பராமரிப்புப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். மிக முக்கியமான பராமரிப்புப் பணிகளில் அனுபவமில்லாதோர் ஈடுபடும்போது அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும். போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்கள் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்தபோது, அனுபவமற்ற தற்காலிக ஓட்டுநர்களை அ.தி.மு.க. அரசு நியமித்த காரணத்தால், ஆற்றில் இறங்கிய பேருந்துகளையும், மரத்தில் மோதிய பேருந்துகளையும், பாலத்தின் நடுவே பேருந்தை நிறுத்திவிட்டு ஓடியவர்களையும் தமிழ்நாடு ஏற்கனவே பார்த்துப் பார்த்துப் பதறிப்போயிருக்கிறது. அதே மோசமான நிலை மின்வாரியத்திலும் ஏற்படும் என்கிற எச்சரிக்கையை மனதில் கொள்ள வேண்டும்.

தனியாருடனான ஒப்பந்தங்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் பெரும் லாபம் தருவதாக இருக்கலாம். அவை தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே இருட்டாக்கக்கூடியவை. மின்துறை வாயிலாக அதனைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டும் அ.தி.மு.க. அரசும், மின்துறை அமைச்சரும், இது தற்காலிகமானது எனப் பொய் முலாம் பூசி உண்மையை மறைப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

நியாயத்தை வலியுறுத்திப் போராடும் மின் தொழிலாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, தனியார்மயத்தை முற்றாகக் கைவிடவேண்டும். இல்லையெனில், தமிழக மக்களின் பேராதரவுடன் தி.மு.கழக அரசு அமையும்போது, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஒப்பந்தங்களில் உள்ள லாபக் கணக்குகளும் ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கைகள் தவறாது எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com