“பேரணிக்கு விளம்பரத்தை ஏற்படுத்தி தந்த அதிமுகவுக்கு நன்றி” - ஸ்டாலின் பேட்டி
திட்டமிட்டப்படி திமுக பேரணி நாளை நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பேரணிக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் தாக்கல் செய்திருந்தார். பொதுச்சொத்திற்கு சேதம், அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் பேரணிக்கு அனுமதி தரக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது. ஆனால் விதிமுறைகளை பின்பற்ற வெண்டியது அவர்கள் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “சிலரை பயன்படுத்தி அவர்கள் மூலம் திமுக பேரணியை தடுக்க அதிமுக திட்டமிட்டது. அதிமுக அரசு திமுக பேரணிக்கு ஒரு விளம்பரத்தை தேடி தந்துள்ளது. அதற்காக அதிமுகவிற்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். பேரணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. நீதிமன்றத்தில் இருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வராததால் நாங்கள் அதில் பங்கேற்கவில்லை” எனத் தெரிவித்தார்.