மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கியதால், விவசாயிகள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தின் நெல் களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஓகைப்பேரையூர் கிராமத்தில் அதிக அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிட்டா அடங்கல் வாங்கி அதன் பின் காப்பீடு செய்வதற்கு காலதாமதம் ஆவதால், தங்கள் பகுதிக்கு தனியாக கிராம நிர்வாக அலுவலரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல், திருத்துறைப்பூண்டி பகுதியில் வயலில் தேங்கிய மழை நீர் வடியாததால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழை விட்டு இரு தினங்களாகியும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களில் தேங்கிய நீர் வடியாத காரணத்தால், சம்பா பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. பாசன வாயக்கால்கள் தூர்வாராமல் இருந்ததே தண்ணீர் தேங்க காரணம் என தெரிவிக்கும் விவசாயிகள், அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகையில் வேளாண் நிலத்திற்குள் ஆற்று நீர் பாய்ந்ததில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மீன்பிடிப்பதற்காக ஆற்றில் விரிக்கப்பட்டிருந்த வலைகளில் நெகிழிக் கழிவுகள், சாக்குப் பைகள் உள்ளிட்டவை சிக்கியதால், வேளாண் நிலத்தில் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாகுபடி செய்த வயல்கள் குளம்போல் காட்சியளிக்கின்றன.
டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்ச் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தஞ்சையில் வெள்ள சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது புதிய தலைமுறையிடம் அவர் இதனை தெரிவித்தார்.