அதிமுகவின் மல்லுக்கட்டை பற்றி பேச விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்க்க வந்த இடத்தில் அதிமுகவில் நடக்கும் மல்லுக்கட்டை பற்றி பேச விரும்பவில்லை என திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து ரசித்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், மு.க. ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும், அதற்கு திமுக எப்போதும் துணைநிற்கும் எனவும் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையேயான மோதல் குறித்து கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் அளிக்கக்கூடிய இடம் அலங்காநல்லூர் அல்ல என்று ஸ்டாலின் கூறினார். ஜல்லிக்கட்டை பார்க்க வந்த இடத்தில் அதிமுகவில் நடக்கும் மல்லுக்கட்டை பற்றி பேச விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.