தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கக் கடிதம்
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரை பரிந்துரை செய்ய அவசரகதியில் கூட்டப்பட்டுள்ள தேர்வுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை பரிந்துரை செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை தலைவர் தனபால், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை பரிந்துரைக்கும் குழுவின் மற்றொரு உறுப்பினரான சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக உரிய அவகாசம் தராமல் அவசரகதியில் கூட்டப்பட்டுள்ள தேர்வுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசு முதன்மைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆணையத்தின் உறுப்பினர் பதவிகளுக்கு விருப்பமனு கொடுத்துள்ளோரின் முமு பயோ டேட்டா இணைக்கப்படாமல் பெயர்கள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.