”10 லட்சம் பேர் மாநாடு; திருச்சியில் தான் மெயின் பிக்சர்” - முதல்வர் ஸ்டாலின்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ச்சியாக இம்முறையும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் நோக்கமாகவே அக்கட்சி தொடர்ச்சியான மாநாடுகளையும், கட்சி சார்ந்த விழாக்களையும் நடத்தி வருகிறது. அந்தவகையில் தான், இன்று மதுரை மாவட்டம் உத்தக்குடியில், திமுகவின் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கே.என். நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். மேலும், இந்த மாநாட்டில் 58 தொகுதிகளை சார்ந்த 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”வீரம் என்றால் மதுரை. பாசம் என்றால் மதுரை. கோவில் என்றால் மதுரை. சாப்பாடு என்றாலும் மதுரை. இங்கு எல்லாமே ஃபேமஸ் தான். இப்படிப்பட்ட மண்ணில் ”என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி மாநாடு” நடைபெறுவது பெருமை" எனத் தொடங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலின் போது BLA-2 உறுப்பினர்களுக்கான பயிற்சியை மண்டல வாரியாக நானே சென்று நடத்தினேன். அதனால்தான் 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முயற்சியில் ஆப் மூலமாக 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களை இணைத்தோம். SIR செயல்முறையில் யாருடைய வாக்குகளும் நீக்கப்படாமல் பாதுகாத்தது நமது இயக்கம் தான்.
2019 முதல் எல்லா தேர்தல்களிலும் நமக்கு வெற்றிமேல் வெற்றி தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை மக்கள் தந்தார்கள். இப்போது அதைவிட அதிக திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 350 வாக்குகள் இலக்கு. அதைப் பூர்த்தி செய்தால் 2 கோடி 50 லட்சம் வாக்குகளை பெற முடியும். அதை வாங்கிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு; உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு. அடுத்த இரண்டு மாதம் — நோ ரெஸ்ட். ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை நேரில் சந்திக்க வேண்டும். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் எல்லாம் இருக்கட்டும்; ஆனால், வீட்டு வாசலில் சென்று கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்பதற்குச் சமம் எதுவும் இல்லை என்றார்.
மகளிர் உரிமைத் தொகையை முடக்க முயன்றதை முறியடித்து முன்கூட்டியே வழங்கினோம். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதை ₹2000 ஆக உயர்த்துவோம். மக்களுக்காக கொடுத்தால் அது தமிழக அரசு; மக்களிடமிருந்து எடுத்தால் அது ஒன்றிய அரசு. மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிறார். அவரிடம் மக்கள் கேட்க வேண்டும். மதுரை மெட்ரோ எங்கே? கோவை மெட்ரோ எங்கே? தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எங்கே? கீழடி அறிக்கை ஏன் வெளியிடவில்லை? போன்றவற்றை.
தமிழ்நாட்டின் நலனுக்காக கேட்க வேண்டியதை எடப்பாடி கே. பழனிசாமி கேட்கவில்லை. ஆனால், நாம் பயப்பட மாட்டோம். மிசா, தடா, எமர்ஜென்சி பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, இடி, ஐடி எதற்கும் அஞ்ச மாட்டோம். இரண்டு மாதங்களில் ஏழு மாநாடுகள். 9 லட்சத்து 30 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன். டிசம்பர் முதல் மார்ச் வரை 20–25 லட்சம் பேரைச் சந்திக்கிறேன். திருச்சியில் மார்ச் 9-ஆம் தேதி பத்து லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடு பார்க்கப் போகிறது. இப்போது காட்டுவது ட்ரைலர் தான்; மெயின் பிக்சர் திருச்சியில். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக இருக்க வேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.
