“வழக்கு தொடர்ந்ததால்தான் உள்ளாட்சியில் திமுக வென்றது” - ஸ்டாலின்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால்தான் திமுகவினால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது என்று ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் பங்கேற்றார். மண் அடுப்பு மற்றும் பானையை பயன்படுத்தி பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு மதத்தினரும் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் பேசிய ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது திமுக பெரிய அளவில் வெற்றி பெறும் எனக் கூறினார். தேர்தலில் முறைகேடுகள் நடைபெறும் என்பதால்தான் நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தி இருந்தால் யாரும் வழக்குப் போடப்போவதில்லை. முறைகேடான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக திட்டமிட்டிருந்த காரணத்தினால் தான் வழக்கு தொடர்ந்தோம். தேர்தல் முறையாக நடந்திருந்தால் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கும் என்ற அவர் வழக்கு தொடர்ந்ததால்தான் உள்ளாட்சியில் திமுக வென்றது என்றும் கூறினார்.

