உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலைக்கு சேர்ந்த ஒருவரை காட்ட முடியுமா? - ஸ்டாலின்
முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலையில் சேர்ந்த ஒருவரை காட்டினால் உங்களை பாராட்டுகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்ததற்கு நன்றி. நன்றி உணர்வோடு உங்களை நாடி வந்திருக்கிறோம். சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். எதிர்க்கட்சி வேட்பாளர் போல் காங்கிரஸ் வேட்பாளர் மீது அடிதடி வழக்குகள் இல்லை. இன்றைக்கு தமிழ்நாட்டிலே என்ன நிலைமை என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.
தமிழ்நாட்டில் நடக்கின்ற ஆட்சி மத்தியில் இருக்கக்கூடிய மோடியின் ஆட்சி. எடப்பாடி தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆட்சி நடத்துகிறார். மக்கள் மீது எந்த அக்கறையும் கொள்ளவில்லை. தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சென்று வந்தனர். எதற்காக செல்கிறோம் என்றால் தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வர செல்கிறோம் என்று கூறினர்.
2015ம் ஆண்டு ஜெயலலிதா உலக முதலீடு மாணவர்கள் மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் அதிக முதலீடு வந்ததாக ஜெயலலிதா கூறினார். அதன் மூலமாக பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறினார். இதுவரை யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவர்கள் இரண்டாவது உலக முதலீட்டு மாநாட்டை நடத்துவதாக கூறுகின்றனர். இதன் மூலம் மொத்தமாக 3 லட்சத்தி 430 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளதாக அறிவித்தனர். இரண்டு உலக முதலீட்டு மாநாட்டையும் சேர்த்து 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். வேலையில் சேர்ந்த ஒருவரை எங்கள் முன் நிறுத்துங்கள். நான் உண்மையிலேயே உங்களை பாராட்டுகிறேன்.” எனத் தெரிவித்தார்.