இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க, கடிதம் எழுதினால் மட்டும் போதாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை அரசின் பிடிவாதத்தால் 85 தமிழக மீனவர்களும், 128க்கும் மேற்பட்ட படகுகளும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, நேரடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடிதம் எழுதுவதோடு தன் பணி முடிந்து விட்டது என்று முதல்வர் இருக்காமல், மீன்வளத்துறை அமைச்சரை உடனடியாக டெல்லிக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து, தூதரக முயற்சிகளை முடுக்கி விட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசும் தூதரக ரீதியாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.