சேலம் அருகே வியாபாரியை அடித்துக்கொன்ற எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

சேலம் அருகே வியாபாரியை அடித்துக்கொன்ற எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
சேலம் அருகே வியாபாரியை அடித்துக்கொன்ற எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வாகன சோதனையின்போது காவலர் தாக்கியதில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்ததையடுத்து, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத நிலையில், மது அருந்துவோர், கருமந்துறை வழியாக தருமபுரி மாவட்ட எல்லைக்குச் சென்று மது அருந்தி வருவது வழக்கமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த எடப்பட்டியில் சோதனைச்சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். நேற்று மாலை, கருமந்துறை வழியாக சென்று மது அருந்திவிட்டு திரும்பிய மளிகைக்கடை வியாபாரி முருகேசனை காவல்துறையினர் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை லத்தியால் தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காவலர் தாக்கியதில் மயக்கமடைந்து விழுந்த முருகேசன் முதலில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகேசன் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டிருந்தார். பெரியசாமி உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி முதலமைச்சர் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com