ஸ்ரீரங்கம் கோயிலில் களவுபோன பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுர விமானம், சிலைகள், நகைகள் மாயமானது குறித்து விசாரித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகத்தின்போது சிலைகள், கதவுகள், நகைகள் திருடப்பட்டது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் மற்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. திருடு போனதாகக் கூறப்படும் பொருட்கள் கோயிலிலேயே இருப்பதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இது சம்பந்தமாக கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, உண்மை நிலவரத்தை தெரிவிக்கும்படி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, கோயிலில் நேரடி ஆய்வு மேற்கொண்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, உண்மையை கண்டுபிடிக்க முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அத்துடன், இந்த வழக்கை விசாரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள், தூண்கள், பழங்காலப் பொருட்கள் காணாமல் போனது தொடர்பான வழக்கை சட்டப்படி அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்டு விசாரிக்க உத்தரவிட்டனர். அதனடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.