இலங்கை கடற்பகுதியிலிருந்து கோடியக்கரைக்கு ஆயிரக்கணக்கில் கடற்காகங்கள் வந்துள்ளன.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான சீசன் காலங்களில் பிளமிங்கோ, செங்கால்நாரை. உள்ளான் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு இன்னும் பருவமழை பெய்யாததால் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வெளிநாட்டு பறவைகளின் வருகை குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் இலங்கை கடற்பகுதியிலிருந்து கடற்காகங்கள் ஆயிரக்கணக்கில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்துள்ளன.
சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும் லாரிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்த கடற்காகங்கள் கோடியக்கரை சித்தர் கட்டப்பகுதியிலும், கடற்கரை, உப்பங்கழி ஆகிய இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன. கடற்காகங்கள் கூட்டமாக கடற்பரப்பில் அமர்ந்து இருப்பது பார்ப்பவர்களை பரவசமடையச் செய்கிறது.