இலங்கை கடற்படை அட்டூழியம் : 4 தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியதோடு 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நேற்று காலை மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகக் தெரிகிறது. இதில் வேலாயுதம் என்பவரின் படகை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் இடித்து மூழ்கடித்துள்ளனர். பின்னர் 4 தமிழக மீனவர்களையும் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை படையினரின் இந்த அட்டூழியத்தால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் மீனவர்கள், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். தாக்குதல் குறித்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, நேற்று பகல் 2 மணி வரை ரோந்துக்கப்பல்கள் செல்லவில்லை என்றும், பலூர் படகு மற்றும் வாட்டர் ஸ்கூட்டர் மூலம்தான் ரோந்து பணி நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கைக் கடல் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவர்களை மீட்டுள்ளதாகவும், அவர்களை இன்று காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.