ஆயிரங்கால் மண்டபமா? திருமண மண்டபமா? - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு

ஆயிரங்கால் மண்டபமா? திருமண மண்டபமா? - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு
ஆயிரங்கால் மண்டபமா? திருமண மண்டபமா? - வரலாற்றுப்பிழை என ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் தனிநபர் வீட்டு திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பது பெரும்‌ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என நால்வரால் தேவாரப்பாடல் பெற்ற தலம் என பல சிறப்புகளைக் கொண்டது சிதம்பரம் நடராஜர் கோயில். இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதி, அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. ஆடல்கடவுளான ‌நடராஜபெருமாள் ஆண்டுக்கு இரண்டு முறை, ஆனந்த தாண்டவமாடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இடமும் இந்த ஆயிரங்கால் மண்டபம்தான். அதனால், தான் கோவில் கருவறைக்கு நிகராக ஆயிரங்கால் மண்ட‌பத்தையும் சி‌வபக்தர்கள் மிகபுனிதமாக கருதுகின்றனர். 

இந்நிலையில், இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு ஆலை அதிபர் ஒருவரது வீட்டு திருமண விழா வெகு ஆடம்பரமாய் நடந்தேறியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனி திருமஞ்சனத்திலும், ஆருத்ரா தரிசனத்திலும் அம்பாளுடன், நடராஜர் ஆனந்த தாண்ட‌வம் அரங்கேற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடத்துவதா என்ற ஆதங்கமும் எழுந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தங்கத்தால் வேயப்பட்டுள்ள கூரையின் கீழ் நரடாரஜரின் கருவறையுள்ளது. இந்த இடத்தில் பக்தர்கள் அவ்வளவு எளிதில் அனுமதிக்கப்படுவதில்லை. மேலாடையின்றி, சிவனை மனதில் ஒருமுகப்படுத்தி செல்பவர்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. அப்படியிருக்க, தனியார் திருமணத்திற்காக தங்கக் கோபுரம் மீதேற அனுமதியளித்தது யார் என கேள்வி எழுப்புகின்றனர் இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர். 

உழவார பணி செய்யும் போதுகூட வெளிநபர்களை தங்ககோபுரத்திற்கு அருகே அனுமதித்தது இல்லை என்கிறார் இந்து ஆலய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த செங்குட்டுவன் முருகன். அதிகாலை சந்தி பூஜைக்கு திறக்கப்படும் கோயில், அர்த்தசாம பூஜைக்கு பிறகு அடைக்கப்பட வேண்டும் என்பதே விதி. அதனையும் மீறி, நள்ளிரவில் கோயில் கதவுகளை திறந்து, திருமணத்திற்கா‌க ஆயிரங்கால் மண்டபத்திலும், தங்ககோபுரக்கூரைகளிலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கோவில் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் அருகில் இல்லாத நிலையில், தங்ககோபுரம் மீதேறி அலங்காரம் செய்தவர்கள், கோபுரத்திலிருந்த தங்க தகடுகளை கழற்றி, போலி தகடுகளை பொருத்தியிருந்தால் கூட யாருக்கும் தெரிந்திருக்காது என்ற அச்சம் எழுந்துள்ளது. அலங்காரப்பணிக்காக சென்ற சிலர் ஆங்காங்கே படுத்துறங்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக திருமணத்திற்கு வந்தவர்கள் ஆயிரங்கால் மண்டபம் வரை காலணி அணிந்து சென்றிருப்பது பக்தர்களை கொதிப்படைய செய்துள்ளது. புனிதமாக நினைத்து சிவதொண்டர்கள் வழிபடும் இடத்தை பணத்திற்காக வர்த்தகரீதியில் பயன்படுத்துவதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சிதம்பரம் கோயில் தீட்ஷிதர் முறையாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணம் நடைபெற்றதில் எந்த உள்நோக்கமும், நிர்பந்தமும் இல்லை என கோயில் நிர்வாகி பட்டு தீட்ஷிதர் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார். 

திருமணத்திற்கு முதல் நாள் ஆயிரங்கால் மண்டபத்தில் நாட்டிய நிகழ்ச்சி ‌நடைபெற்றதாகவும், அதனாலேயே மலர் அலங்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டிய நிகழ்ச்சிக்காக செய்யப்பட்ட மலர் அலங்காரம் அப்படியே வைக்கப்பட்டிருந்ததாகவும், திருமணத்திற்காக எந்த அலங்காரமும் செய்யவில்லை என்றும் பட்டு தீட்ஷிதர் விளக்கமளித்துள்ளார். 

திருமணத்திற்காக முதலில் உள்பிரகாரத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டதாகவும், அன்றைய தினம் நடைபெற்ற குடமுழுக்கிற்கு வந்த பக்தர்களுக்கும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கமோ, நிர்பந்தமோ இல்லை என்றும்‌ இனி இது போன்று நடைபெறாது என்றும் பட்டு தீட்ஷிதர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com