தமிழக கேரள எல்லை சாலைகளில் கனமழையால் உருவான கண்கவர் குட்டி அருவிகள்

தமிழக கேரள எல்லை சாலைகளில் கனமழையால் உருவான கண்கவர் குட்டி அருவிகள்
தமிழக கேரள எல்லை சாலைகளில் கனமழையால் உருவான கண்கவர் குட்டி அருவிகள்

திருநெல்வேலியில் இருந்து புளியரை பகுதி வழியாக கேரள மாநிலம் செல்லும் வழியில், கனமழையால் சிறு சிறு அருவிகள் பல உருவாகியுள்ளன. கடப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் இயற்கையின் இந்த அதிசயம், கண்ணுக்கு விருந்தாகும் வகையில் இருக்கின்றது.

திருநெல்வேலியில் இருந்து தமிழக -கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளா மாநிலம் செல்லலாம். நெல்லை மாவட்டத்தில் இருந்தும் சமீபத்தில் பிரிந்த தென்காசி மாவட்ட மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதியில் இருந்தும் காய்கறிகள் பாத்திரங்கள் போன்றவை கேரள மாநிலத்திற்கு இந்த செங்கோட்டை புளியரை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் செல்வது வழக்கம்.

தமிழக கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடி தாண்டியதும் S பெண்ட் எனும் வளைவு தாண்டியதுமே பாதை, மலை மீதான பயணமாக மாறும். மேற்கு தொடர்ச்சி மலைப்பாதையில் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாது. கொஞ்ச தூரம் வரை பாதை ஏற்றமாகத்தான் இருக்கும். ஆனால் இருபுறமும் பச்சைப் பசேலென காடுகள் வளர்ந்து பகலிலும் இருளை கொட்டிக் கொண்டிருக்கும்.

இந்த மலைச் சாலை, புளியரையில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கேரள மாநிலம் புனலூர் வரை இப்படியே தான் செல்லும். இளைப்பாற, பசியாற இடையிடையே சிறுசிறு உணவகங்கள் புகையைக் கக்கிக்கொண்டு தன்னை அடையாளப்படுத்தி இருக்கும். பருவமழை காலங்களில் இந்த மலைச் சாலையில் கூடுதலாக ஒரு ஓசை விட்டுவிட்டு கேட்டுக்கொண்டே இருக்கும். இரவில் பயமுறுத்துவதாக அமையும் அந்த ஓசை பகலில் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். ஆம், பருவமழை காலங்களில் சாலையின் ஓரம் மலைப் பாறைகளில் பிளவுற்ற கற்களின் வழியில் மழை நீர், யாரோ மலையிலிருந்து தள்ளி விட்டது போன்ற வேகத்தில் பாய்ந்து ஓடி வரும்.

வீடுகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின், கொலுசின் ஒலி போல நம் பயணத்தின் நிமிட இடைவெளியில் ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் மலையில் உருவாகி கொட்டிக் கொண்டிருக்கும். அங்குள்ள பாறைகளை செயற்கையாக செதுக்கினால்கூட இந்தளவுக்கு அமைப்பான நீர் வீழ்ச்சி வராது. அந்தளவுக்கு இயற்கையான இந்த சிறு நீர்வீழ்ச்சிகள் காண்பவரை கவர்ந்திழுக்கும். தன்னை கடப்பவர்களின் கவனத்தை ஒரு நொடியில் தன் திசை திருப்பி விடும்.

குடும்பமாக காரில் செல்பவர்கள் உங்களுக்கு பிடித்த எந்த ஒரு அருவியிலும் நின்று குளித்து மகிழ்ந்து செல்லலாம். கட்டணம் எதுவும் இயற்கைக்கு கொடுக்க வேண்டியதில்லை.

-  நெல்லை நாகராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com