மதுரையில் கொரோனா வைரஸ் ஒழிய தன்வந்திரி யாகத்துடன் சிறப்பு வழிபாடு
கொரோனா வைரஸை ஒழிக்க சிறப்பு யாகம் மதுரையில் நடைபெற்றது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ளோர் கொரோனாவிலிருந்து விடுபட சிறப்பு பூஜைகள், மந்திரங்களை ஓதுதல், அபிஷேக ஆராதனைகளை நம்பிக்கையோடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் கொரோனா வைரஸ் அழியவும், உலக மக்கள் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு நன்மையோடு வாழ வேண்டியும் கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். இதில், தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டு ஹோம குண்டத்தில் வேத மந்திரங்கள் சொல்ல அக்னி வளர்க்கப்பட்டது. வளர்க்கப்பட்ட அக்னியில் கொரானா வைரஸ் போன்ற உருவ பொம்மை உருவாக்கி அதை ஹோம குண்டத்தில் போட்ட அர்ச்சகர்கள் யாகம் வளர்த்தனர். தொடர்ந்து, திரௌபதியம்மனுக்கு சிறப்பு பூஜைகளை நடைபெற்றது.