லீவு நாட்களிலும் டாக்டர்கள் பணிக்கு வரவேண்டும்: அமைச்சர்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். பின்னர் பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதுமுள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், விடுமுறை நாட்களிலும் அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற அமைச்சர் அறிவுறுத்தினார். தற்போது காய்ச்சல் குறித்து கண்டறிய சுமார் 800 ரத்த பரிசோதனைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், 15 நிமிடங்களில் ரத்த மாதிரியின் முடிவுகளை தெரிந்து சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.