அத்திவரதர் திருவிழாவிற்காக அரக்கோணத்திலிருந்து சிறப்பு ரயில்
அத்திவரதர் திருவிழாவிற்காக அரக்கோணத்தில் இருந்து ஜூலை 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லும் ரயில்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்திவரதர் சிலையை ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். இந்நிலையில் அத்திவரதர் திருவிழாவிற்காக அரக்கோணத்தில் இருந்து ஜூலை 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தை 11.52-க்கும், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தை 11.58 மணிக்கும் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்கு 12.50 சிறப்பு ரயில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் செங்கல்பட்டியிலிருந்து மதியம் 1.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தை 2.20-க்கு சென்றடையும். மீண்டும் அங்கிருந்து, புறப்படும் ரயில் 3.1-5க்கு அரக்கோணத்தில் சேரும். காஞ்சிபுரம் - திருமால்பூர் - அரக்கோணம் வழித்தடத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிறப்பு ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கடற்கரையிலிருந்து மதியம் 3 மணி, இரவு 8.09 மணிக்கு திருமால்பூருக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக காலை 7.25-க்கு இயக்கப்படும் மின்சார ரயில் அனைத்து ரயில்நிலையங்களிலும் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமால்பூரில் இருந்து காலை 10.40 மற்றும் மாலை 6.40க்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில்களும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அனைத்து ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.