சிறப்பு பள்ளி ஆசிரியர் ஊதியம் குறித்த வழக்கு – நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!
2016-ல் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் குறித்த உச்ச நீதிமன்றம் உத்தரவை ஏன் முறையாக பின்பற்றவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் அமைப்பின் செயலாளர் வெற்றிவேல் முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'அறிவுசார் குறைபாடு, உடல் ஊனமுற்ற குழந்தைகள் நலன் கருதி சிறப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடு, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உள்ள சிறப்பு பள்ளிகள் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அறிவுசார் குறைபாடு, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இங்கு பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான ஊதியம் மிக மிகக் குறைவு. மற்ற ஆசிரியர்களை போல அவர்களுக்கும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.
இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே, அறிவுசார் குறைபாடு, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களை போல் சலுகைகளுடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்கவும், ஆசிரியர்களை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும்.' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழ்நாட்டில் அறிவுசார் குறைபாடு, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு 250 பள்ளிகளும் 500 ஆசிரியர்களும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அறிவுசார் குறைபாடு, உடல் ஊனமுற்ற குழந்தைகள் உள்ளனர். மாணவர்கள் 8 பேருக்கு ஒரு ஆசிரியர் 1:8 என்ற விகிதாச்சாரம் என விதிகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், இது மிக முக்கிய வழக்குகளில் ஒன்று 2016-ல் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவை ஏன் முறையாக பின்பற்றவில்லை.
சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பு பள்ளிகள் எத்தனை உள்ளது அதில் செய்யப்பட்டுள்ள வசதிகள் என்ன? சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமிப்பதற்கான முறைகள் என்ன?
சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களை போல ஊதிய நடைமுறைகள் வழங்குவது குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, இதுகுறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

