நியூட்ரினோ அறிவியல் ஆராய்ச்சியா?: கொதிக்கும் பூவுலகின் நண்பர்கள்

நியூட்ரினோ அறிவியல் ஆராய்ச்சியா?: கொதிக்கும் பூவுலகின் நண்பர்கள்

நியூட்ரினோ அறிவியல் ஆராய்ச்சியா?: கொதிக்கும் பூவுலகின் நண்பர்கள்
Published on

நியூட்ரினோ திட்டத்திற்கு சிறப்பு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் மதீப்பீட்டு குழுவின் முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் தங்களது ஃபேஸ்புக்கில் பதிவில், “ நியூட்ரினோ திட்டத்தில் உள்ள தேசிய முக்கியத்துவம் காரணமாக சிறப்புத் திட்டமாக கருதி செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசின் நிலைப்பாடானது இந்த திட்டத்திற்கு எதிரானதாகவே இருந்துள்ளது எனக் கூறியுள்ளனர். நியூட்ரினோ திட்டத்திற்கு சலீம் அலி என்ற நிறுவனம் தயாரித்த சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையின் அடிப்படையில் தான் 2011ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை "சுற்றுச்சூழல் அனுமதி" வழங்கியது. இந்த அனுமதியைப் பெற்றவுடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியைப் பெறாமலே திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து 2015ஆம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர் .

அறிக்கை தயாரித்த சலீம் அலி நிறுவனம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனம் என்பதால் இத்திட்டத்திற்கான அனுமதியை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரனையின்போது பதில் அளித்த தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க பல்வேறு அறிவியல் துறை சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழுவை உருவாக்கி அக்குழுவின் அறிக்கை அடிப்படையில்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி வழங்க முடியும் என தெளிவாகக் கூறியிருந்ததையும் நினைவுப்படுத்தியுள்ளனர். 

இத்திட்டத்திற்கான புதிய சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2017ஆம் ஆண்டு "டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்" தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் இந்த ஆய்வகத்தை அமைக்க மலையைக் குடையும்போது சக்திவாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும், 6லட்சம் டன் பாறைகள் தகர்க்கப்படும், மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர்பெருக்க இடமாக உள்ளதாலும், அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் வாழ்கிறது என்பதாலும், பொட்டிபுரம் மலைப்பகுதி வைகை நதியின் முக்கிய நீராதராமாக விளங்குவதால் 5  மாவட்ட நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நீர்ப்பிடிப்பு பகுதியாக இருப்பதாலும் இத்திட்டத்திற்கு கேட்டகரி ’பி’ அதாவது வெறும் கட்டுமானம் மட்டும் உள்ளடங்கிய திட்டமாக அனுமதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தது.

மேலும் கடந்த மாதம் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு வருமென்றால் இந்த திட்டம் அனுமதிக்கப்படாது எனக் கூறியிருந்தார். ஆனால் இந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி நியூட்ரினோ ஆய்வக மையம் தேச முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தைக் கூறி இதை சிறப்புத் திட்டமாகக் கருதி அனுமதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

மேலும் இத்திட்டதால் கதிர் வீச்சு அபாயம் இல்லை, வெடிமருந்து பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது எனவும் கூறியுள்ளது. சிறப்புத் திட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டதால் இனி புதிதாக சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும், பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டமும் நடத்த தேவையில்லை எனவும் கூறியுள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியினையும், தேசிய வனவிலங்குகள் நல வாரிய அனுமதியையும் பெற்ற பின்னர் இத்திட்டத்தின் கட்டுமானத்தை தொடங்கலாம் எனவும் கூறியுள்ளது.

இந்த முடிவை எடுத்தால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என கடந்த மாதமே சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நோட்டீஸ் விடுத்திருந்ததாகவும். அதில் "இந்த திட்டம் அமைவதற்கு "பல லட்சக்கணக்கான" டன் வெடிமருந்துகளை பயன்படுத்தி பல லட்சம் டன் பாறைகள் உடைக்கப்படும் போது சுற்றுச்சூழலில் பெரிய தாக்கம் ஏற்படும், இப்படிப்பட்ட திட்டத்தை "கட்டுமான திட்டமாக" கருத முடியாது என்றும், இத்தகைய திட்டத்திற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் "கட்டுமானத்திட்ட பிரிவின்" கீழ் விண்ணப்பிக்கப்பட்டது பிழையானது" என்று தெரிவித்தாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒப்புதலை வழங்க நடந்த "நிபுணர் மதீப்பீட்டு குழு" கூட்டத்தில் இந்திய நாட்டின் "பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்" DRDO வை சேர்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இது அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி என்று இதுகாலம் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லிவந்த திட்டக்குழுவினரின் உண்மை நோக்கமும் இதன் மூலம் வெளிப்படுகிறது என பதிவிட்டுள்ளனர்.

இப்படி தமிழக அரசின் நிலைப்பாட்டையும் மதிக்காது இந்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மதிக்காமல் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு எடுத்துள்ள இம்முடிவு மாநில சுயாட்சி உணர்வை கடுமையாக பாதிக்கும். இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கும் இந்த நடவடிக்கையை தமிழக அரசும் எதிர்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.” என அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com