உலக பாரம்பரிய மலை ரயில் ஊட்டி வரை நீட்டிப்பு

உலக பாரம்பரிய மலை ரயில் ஊட்டி வரை நீட்டிப்பு

உலக பாரம்பரிய மலை ரயில் ஊட்டி வரை நீட்டிப்பு
Published on

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10 மணிக்கு நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை  ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு மலை ரயில் போக்குவரத்து கடந்த 8.12.18 அன்று துவக்கப்பட்டது. 

இந்தச் சிறப்பு மலைரயில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு 12.30 மணிக்கு குன்னூரை சென்றடையும். இந்தச் சிறப்பு மலைரயில் குன்னூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால் உதகை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் குன்னூரில் மாற்று வாகனம் மூலம் ஊட்டி செல்ல வேண்டியிருந்தது. 

இதனால் வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலை போன்றே கோடை கால சிறப்பு மலை ரயிலையும் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாகம் இன்று முதல் சிறப்பு மலை ரயிலின் சேவையினை உதகை வரை நீட்டித்துள்ளது. இதனால் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலை ரயில் ஊட்டி வரை இயக்கப்படவுள்ளது. 

இந்த கோடைகால மலை ரயில் சேவைக்காக சென்னை பெரம்பலூர் ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட ஐந்து புதிய நவீன ரக ரயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு மலை ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளன. 132 இருக்கைகள் கொண்ட இந்தச் சிறப்பு மலைரயிலில் முதல் வகுப்புக்கு 16 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஊட்டி மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர். 

இந்நிலையில் இந்தக் கூடுதல் ரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் புதிய வசதிகளுடன் நீலகிரியின் இயற்கை எழிலை முழுமையாக கண்டு ரசிக்கும்படியான ரயில் பெட்டிகளில் பயணிப்பது சுற்றுலா பயணிகளிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com