நீட் விலக்கு: புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை கூடுகிறது சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்
நீட் விலக்கு தொடர்பான சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறவுள்ள நிலையில், அதை நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலைஞர் படத்திறப்பு விழா புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. அதன்பின்னர் கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், சிறப்பு கூட்டத்திற்காக முதல் முறை தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
`காகிதமில்லா சட்டப்பேரவை’ என்ற அடிப்படையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறுப்பினர்களுக்கு டேப் வழங்கப்பட்டது. மேலும் உறுப்பினர் இருக்கைகளில் கணிப்பொறியும் வைக்கப்பட்டு, நிதி நிலை அறிக்கை தாக்கல், மானியக்கோரிக்கை, ஆளுநர் உரை என அனைத்தும் ஆவணங்களும் டேப்பில் பதியேற்றம் செய்யப்பட்டது. இதே போலவே, தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் டேப் ஒவ்வொரு உறுப்பினர் இருக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படியாக நாளை நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நேரலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.