PT Exclusive| தமிழா தமிழாவில் ஸ்பெஷலாக இனி என்ன இருக்கும்? சொல்கிறார் புதிய தொகுப்பாளர் ஆவுடையப்பன்!

ஜீ தமிழ் சேனலின் ’தமிழா.. தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள பத்திரிகையாளர் ஆவுடையப்பன், புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டி.
ஆவுடையப்பன்
ஆவுடையப்பன்twitter

பிரபல தமிழ்த் தொலைக்காட்சியான ஜீ தமிழ் சேனலில், ’தமிழா.. தமிழா’ என்ற விவாத மேடை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சியைத் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கிவந்தார்.

அப்படியான நிலையில், கடந்த மார்ச் மாதம் அந்த நிகழ்ச்சியிலிருந்து கரு.பழனியப்பன் விலகினார். இதனால், கடந்த சில மாதங்களாக அந்த நிகழ்ச்சி நின்று போனது. தற்போது பத்திரிகையாளர் ஆவுடையப்பன் மூலம், மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வரும்நிலையில், ப்ரோமோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Avudaiappan
Avudaiappan

இதையொட்டி பத்திரிகையாளர் ஆவுடையப்பனிடம் நாம் கலந்துரையாடினோம்.

“இந்த நிகழ்ச்சியை எவ்வளவு பொறுப்பாக உணர்கிறீர்கள்?”

“மக்களிடமிருந்து வரக்கூடிய பின்னூட்டங்கள், வரவேற்புகள்... இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமானது என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. இதனாலேயே இந்த நிகழ்வை ஒரு பெரிய பொறுப்பான நிகழ்ச்சியாகக் கருதுகிறேன். அது ப்ரோமோவின்போதும் நான் நினைத்தது நன்றாக பிரதிபலித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும் தலைப்புகளை வைத்து அதை மேலும் மெருகூட்டி, அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வதில் எனக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாக எண்ணுகிறேன்”.

“இந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறோம் என்று முன்பு நினைத்துப் பார்த்தது உண்டா?”

“இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்கிற ஆசை இருந்தது. ஆனால், இந்த நிகழ்வில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு வந்தது ஓர் ஆச்சர்யம்தான். முதலில் ‘இந்த நிகழ்ச்சி குறித்து பேசுவோம்’ என்றுதான் அழைத்தனர். அப்போதுதான், ’உங்களுக்கு இதில் பணியாற்ற விருப்பம் இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது பணி இருக்கிறதா’ எனக் கேட்டனர். அதற்கு நான் ’வேறு இல்லை’ என்றதும் ’ஆடிஷன் வாங்க’ என அழைப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து நான் ஆடிஷன் சென்றேன். ஆடிஷன் சரியாக இருந்ததை அடுத்து தொடர்ந்து பேசினோம். அதற்குப் பிறகு நிகழ்ச்சியில் இணைந்துவிட்டேன்”.

“இந்த நிகழ்வில் வேறு ஏதாவது ஸ்பெஷல் அல்லது மாற்றம் இருக்குமா?”

“இந்த நிகழ்வில் விதிமுறைகளில் மாற்றம் இருக்காது. ஆனால், presentation-ல் ஏதாவது சிறப்பாக செய்ய முடியுமா என ஆலோசித்து வருகிறோம். என்றாலும், இதைவிட சிறப்பாய் செய்ய வேண்டும் என எனக்கும், என் குழுவினருக்கும் ஆசை இருக்கிறது”.

Avudaiappan
Avudaiappan

“தமிழகத்தின் பிரபலமான இந்த ஷோவுக்கு தொகுப்பாளராய் நீங்கள் வந்துள்ளீர்கள், இந்த ஃபீல்டு உங்களுக்கு எப்படி உள்ளது?”

“நிச்சயமாக, இந்த நிகழ்ச்சி என் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். தொடக்கத்தில் இருந்தே நான் மீடியா துறையில் இருந்து வந்ததால் இந்த நிகழ்வும் எனக்கு ஓர் இணைப்புப் பாலமாகவே இருக்கிறது. இதை, புதிது என்று சொல்ல முடியாது. மீடியாவுடனேயே இணைந்திருப்பதால் சின்னச்சின்ன மாற்றங்கள் மட்டுமே உள்ளது. ஆயினும் இதுவும் எனக்கு ஓர் அனுபவமாகத்தான் இருக்கும்”

“மீடியாவில் உங்களுடைய பயணம் குறித்துச் சொல்லுங்கள்?”

“என்னுடைய பயணம் மீடியா துறையுடன் தொடர்புடையதுதான். டெக்னிக்கல் பிரிவில் வீடியோ எடிட்டராய் behindwoods-ல் பயணம் ஆரம்பமானது. அப்போது முகநூல், ட்விட்டர் வலைதளங்களில் சிறப்பான கருத்துகளை எடுத்து ’வலைபாயுதே’ என்கிற தலைப்பில் விகடன், நக்கீரன் உள்ளிட்ட இதழ்களில் வெளியிடுவர். இது, வாசகர்களிடம் நன்றாக ரீச் ஆகிக் கொண்டிருந்தது. அதில் நானும் தொடர்ந்து எழுதி கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் behindwoods-ல் சினிமாவைத் தாண்டி வேறு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற நிலையில் வேறுவேறு தொகுப்பாளர்களைத் தேடிக் கொண்டிருந்தனர்.

Avudaiappan
Avudaiappan

அப்போது, சமூக வலைதளங்களில் நான் எழுதியதைப் பார்த்து மேனேஜ்மென்ட்டே, எனக்கு வாய்ப்பு கொடுத்தது. தற்போது ஜீ தமிழுக்கான வாய்ப்பு எப்படி வந்ததோ, அதேபோல்தான் அந்த வாய்ப்பும் வந்தது. அப்போது நான் டெக்னிக்கல் துறையில் இருந்தேன். ’இதையும் முயற்சி செய்து பாருங்கள்’ என அவர்கள் வீடியோ உலகத்துக்கான வழிகளைக் காட்ட, அதுமுதல் அரசியல் களத்தை நோக்கி எனது பயணம் தொடங்கியது”

”சாதாரணமான பார்வையாளராக இருந்தபோது, இந்த நிகழ்ச்சியை எப்படிப் பார்த்தீர்கள்? இந்த நிகழ்ச்சியில், உங்களைப் பாதித்த எபிசோட் எது?”

“நான் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சியில் பார்த்துவிடுவேன். அப்படி, பார்க்க முடியாத நேரத்திலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பார்த்துவிடுவேன். இதில் தூய்மைப் பணியாளர் குறித்த விவாத நிகழ்வு என்னைப் பாதித்தது”

”அரசியல்வாதிகளிடம் நேர்காணல் கண்ட அனுபவம் குறித்து?”

“அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. பொதுவாக, அரசியல்வாதிகள் என்பவர்கள் மக்களின் பிரதிநிதிகள். நான், அரசியல்வாதிகளைவிட, மக்களைச் சந்தித்து நேர்காணல் நடத்தியது ஒரு பெரிய அனுபவம். அதேநேரத்தில் அரசியல் ரீதியாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேர்காணல் எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தன. அவரிடம் வீடியோவுக்கும் இதழுக்கும் பேட்டி கேட்டிருந்தேன். அதன்படி, அவரிடம் எடுத்த வீடியோ பேட்டி வெளியாகிவிட்டது. ஆனால், இதழ் வெளிவர ஒரு வாரம் இருந்த நிலையில் அப்போது, சில மாற்றங்கள் நடைபெற்றன. இதுகுறித்து ப.சிதம்பரம் அவர்களிடம் நான் தெரிவித்து, ‘2 கேள்விகள் மாற்ற வேண்டியிருக்கும் சார்’ என்றேன். அவரும் ஓகே சொல்லி போனில் ரெக்கார்டு செய்யச் சொன்னார். அதன்படி, நான் 2 கேள்விகள் கேட்டேன்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்கோப்புப் படம்

அவரும் இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். 3வது கேள்வியை நான் கேட்டபோது, அவர், ‘நீங்கள் என்னிடம் 2 கேள்விகள்தானே சொல்லியிருந்தீர்கள்’ என்றார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், அவர் நேரத்தை மட்டுமல்ல, சொன்ன செய்தியையும் சரியாகக் கையாளக்கூடியவர். அதாவது, அந்த நேரத்திற்குள் சொல்லக்கூடிய ஒவ்வொர் வார்த்தையையும் கவனமாகக் கையாளக்கூடியவர். மற்ற அரசியல்வாதிகளிடம் ‘2 கேள்விகள் தான்’ என்று சொல்லிவிட்டு கூடுதலாய்க் கேள்விகள் கேட்பதுபோல் அவரிடம் கேள்வி கேட்க முடியாது. காரணம் அவர் நேரத்தையும், சொன்ன சொல்லையும் மிகச் சரியாகப் பயன்படுத்தக்கூடியவர். இதுவும் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது”.

”இந்த புதிய பணி குறித்து உங்களுடைய நண்பர்கள் சொன்னது என்ன?”

“எல்லோரும் வாழ்த்து சொன்னார்கள். பிரபல தலைவர்களுக்கு நான் ப்ரோமோ அனுப்பியிருந்தேன். அவர்கள் அதை பார்த்துவிட்டு, ‘நன்றாகச் செய்துள்ளீர்கள். இது ஒரு கன்டென்ட்-ஆன ஒரு ஷோ. வாழ்த்துகள்’ எனப் மெசேஜ் அனுப்பியிருந்தனர்”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com