வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்..!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்த பணிகளுக்கான இறுதி கட்ட சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லையென்றாலோ, அல்லது தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தாலோ, சிறப்பு முகாமை பயன்படுத்தி அவற்றில் திருத்தங்கள் செய்யலாம்.
மேலும் ஏற்கெனவே நடைபெற்ற மூன்று முகாம்களில் 11 லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் இன்று இறுதி கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் முகாம் தவிர, www. elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் திருத்தங்கள் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.