விதிப்படி தான் வாக்கெடுப்பு நடைபெற்றது: சபாநாயகர் தனபால்
விதிப்படி தான் வாக்கெடுப்பு நடைபெற்றது எனவும், அவையை விட்டு வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் வெற்றி பெற்ற பின் பேசிய சபாநாயகர் தனபால், பேரவையில் தீர்மானம் தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வந்து குந்தகம் விளைவித்து சென்றிருப்பதாக தெரிவித்தார்.
திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்த போதே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் தொடர்சியாகத் தான் வாக்கெடுப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார். திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும், வெளியேறிய காங்கிரஸ், மற்றவர்களும் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் கூட தீர்மானம் வெற்றி பெற்றதாகத் தான் இருந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
விதிகளின் படி தான் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கூறிய அவர், வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்ததாகவும் தெரிவித்தார்.