சென்னையில் புறநகர் ரயில் சேவை எப்போது?: ரயில்வேத் துறை டிஐஜி பதில்
சென்னை மாநகரில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்க இருக்கிறது என ரயில்வேத் துறை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்துள்ளார்
இது குறித்து தெரிவித்துள்ள ரயில்வேத் துறை டிஐஜி அருள் ஜோதி, சென்னை மாநகரில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்க இருக்கிறது. அப்படி தொடங்கும்போது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இது குறித்து ஏற்கெனவே ஆலோசனை நடத்தி இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
கடந்த ஒன்றாம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகர போக்குவரத்து கழகத்தில் 3 ஆயிரத்து 300 பேருந்துகள் உள்ள நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் 2 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அப்போது நாள்தோறும் சுமார் 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாகவும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தற்போது 2 ஆயிரத்து 500 பேருந்துகளாக அதிகரித்துள்ளதாகவும், மின்சார ரயில்கள் இல்லாததால், ஆவடி, அம்பத்தூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினசரி பேருந்து பயணிகளின் எண்ணிக்கை 11 லட்சமாக அதிகரித்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.