மிரட்டும் கடல்: தவிக்கும் குமரி!

மிரட்டும் கடல்: தவிக்கும் குமரி!

மிரட்டும் கடல்: தவிக்கும் குமரி!
Published on

குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக தொடரும் கடல்சீற்றத்தின் காரணமாக மீனவர்களும் பொதுமக்களும் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுப்படுகிறது. இரயுமன்துறை பகுதி கரையில்
நிறுத்தப்பட்டிருந்த 5 சிறுபடகுகள் மற்றும் ஒரு படகின் எஞ்சின் ஆகியவை கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளன. குளச்சல் பகுதியில் 3 சிறுபடகுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதேபோன்ற சீற்றத்தால் பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டிருந்த தேங்காய்பட்டினம் - இரயுமன்துறை சாலையில், தற்போது கடல் நீர் புகுந்து கடல் மண் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு கடற்கரை கிராமங்களில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதலே வருவாய்த்துறையினர் இப்பகுதிகளில் முகாமிட்டு மக்‌களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இருப்பினும், மேற்குகடற்கரை பகுதிகளில், தரமான முறையில் தடுப்பு சுவர் அமைக்கப்படாததே பாதிப்புகளுக்கு காரணம் என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மே, ஜூன் மாதங்களில் வழக்கமாகவே கடல்சீற்றத்தால் சற்று அதிக பாதிப்புகள் இருக்கும் என்பதால், தடுப்பு சுவர்களை உயர்த்தி பலப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குளச்சல் சுற்றவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல்சீற்றத்தால், மண்டைக்காடு புதூர் பகுதியில் சுமார் ரூ.7 கோடி மதிப்பில்
அமைக்கப்பட்டிருந்த கடலரிப்பு தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதேபோல்‌, கொட்டில்பாடு, குறும்பனை பகுதிகளிலும் 5 வீடுகள் சேதமடைந்துள்ளது. அவற்றை மாவட்ட துணை ஆட்சியர் இன்று பார்வையிட்டார். நேற்று நள்ளிரவில் சுமார் 30 அடி உயரம் வரை அலைவீசியதில் 3 படகுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன. குளச்சல் துறைமுக பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மற்றும் அவரது நண்பர், இருசக்கர வாகனத்துடன் ராட்சத அலையில் சிக்கி படுகாயமடைந்தனர். 

தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தொடர்ந்து கடல் சீற்றத்துடனே காணப்படுவதால் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு மீனவர்கள் கொண்டு செல்கின்றனர். கடலோர பாதுகாப்புப் படையினரை, அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தவும் மீனவர்கள் கோரிக்கைவிடுத்தனர். கடலின் சீற்றத்தால் குமரி மக்கள் முற்றிலும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com