மார்த்தாண்டம் அருகே முந்திரி தொழிற்சாலை பாதுகாவலரை தாக்கிய நபர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சூசைபுரம் பகுதியில் தனியார் முந்திரி தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதைக்கண்ட தொழிற்சாலை பாதுகாவலர் மணி, அவர்களை தடுத்துள்ளார். அப்போது தாங்கள் காவல்துறையினர் என்று கூறி அந்த நபர்கள் மணியை தாக்கியுள்ளனர். அத்துடன் தொழிற்சாலையில் பூட்டியுள்ள மற்ற அறைகளின் சாவிகளை கேட்டும் அடித்துள்ளனர். இதையடுத்து பாதுகாவலர் மணி உள்ளிட்ட பலர், தொழிற்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் தாக்குதல் நடத்திய கும்பல் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக புகார் அளித்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.