''காங்கிரஸும் திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்'' : சோனியா காந்தி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸும் திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து ராயப்பேட்டையில் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் பேசிய சோனியா காந்தி, "நவீன இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஜாம்பவனாக இருந்த கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வாழ்க்கை வரலாற்று சாதனைகளை நினைவு கூர்ந்து மகிழ்கிறேன். கருணாநிதி தமிழக அரசியலை தவிர தமிழ் மொழிக்கும் இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது அவருக்கு பெரும் மகிழ்ச்சி. கூட்டாட்சி தத்துவத்தில் மாநிலங்களின் உரிமைக்காக கடைசி வரை போராடிய ஒரு மிகப்பெரிய தலைவர் கருணாநிதி” என்றார்.
மேலும் பேசிய அவர், “ நான் தனிப்பட்ட முறையில் தேசிய அரசியலில் சிக்கலைச் சந்தித்த போது அவர் வழங்கிய அறிவுரைகளை நான் தனிப்பட்ட முறையில் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறேன். தேசத்தை காக்கும் அரசியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் எப்போதும் இணைந்து செயல்பட வேண்டும்” என சோனியா காந்தி கூறினார்.