இறந்த தாயின் உடலை வாங்கமுடியாமல் 5 நாட்களாக தவிக்கும் மகன் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!

இறந்த தாயின் உடலை வாங்கமுடியாமல் 5 நாட்களாக தவிக்கும் மகன் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!
இறந்த தாயின் உடலை வாங்கமுடியாமல் 5 நாட்களாக தவிக்கும் மகன் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!

கடந்த 5 நாட்களாக இறந்த தாயின் உடலை வாங்க முடியாமல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்வதறியாமல் இளைஞர் தவித்துவருவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியைச் சார்ந்தவர் வசந்தா. கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி இவர் மீது அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டார். செங்கல்பட்டில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு மாத காலம் தீவிர சிகிச்சையில் இருந்தார்.

தற்போது கொரோனா நோய தொற்று அதிகம் பரவி வருவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தைக் காட்டி அங்கிருந்து வசந்தாவை வீட்டிற்கு டிசார்ஜ் செய்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்த வசந்தா ஓரிரு நாட்களில் உடல் மேலும் நலிவுற்று கடந்த 1ஆம் தேதி மதியம் 3 மணிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வசந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து மகனிடம் உரிய முறையில் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் கடந்த 5 நாட்களாக அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறை சார்பாக மருத்துவமனையில் இருந்து முறையாக எந்த ஒரு தகவலும் வரவில்லை என கூறுகிறார்கள். அதேசமயம், மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உரிய முறையில் தகவலை ஏற்கனவே அனுப்பிவிட்டதாக கூறுகிறார்கள். வசந்தாவின் மகன் இரவு பகலாக மருத்துவமனை பிணவறையில் வாயிலிலேயே செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி எனது தாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதியம் 3 மணிக்கு அனுமதித்தேன். நான் அனுமதித்த சில மணி நேரங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். என் தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்து என்னிடம் ஒப்படைக்க காவல்துறையும் மருத்துவமனை நிர்வாகமும் என்னை மிகவும் அலைக்கழித்து வருகிறார்கள். காவல்துறையினர் என் தாய் விபத்தில்தான் உயிரிழந்தார் என்பதற்கான சான்றிதழை மருத்துவமனையிலிருந்து பெற்று வருமாறு கூறுகின்றனர்.

அதேசமயம் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கும்பொழுது வசந்தா உயிரிழந்தது தொடர்பாக அனைத்து ஆவணங்களும் காவல்துறையிடம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது எனக் கூறுகிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் கூறும் தகவலை காவல்துறையிடம் கூறினால் என்னை கடும் சொற்களால் திட்டுகிறார்கள். கடந்த 5 நாட்களாக எனது தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பிணவறையில் தற்போது வரை வைத்திருக்கிறார்கள்’’ என்று கதறி அழுகிறார். 

கடந்த 5 நாட்களாக இறந்த தாயின் உடலை வாங்க முடியாமல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்வதறியாமல் இளைஞர் தவித்துவருவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com