15 ஆண்டுகளுக்குப்பின் தாயுடன் சேர்ந்த மகன் : ஊரடங்கில் ஊர்திரும்பிய கதை
15 வருடங்களுக்கு முன் குடும்பத்தை பிரிந்து சென்ற நபர், ஊரடங்கு ஏற்படுத்திய சூழலால், இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மீண்டும் தாயுடன் சேர்ந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த வரலட்சுமி, சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கணவர் இறந்துவிட்ட நிலையில், 2 மகள்கள், 5 மகன்களை வளர்தது வந்த இவர், குடும்பச்சூழலால், அவர்களை படிக்க வைக்காமல் வேலைக்கு அனுப்பியுள்ளார். இவர்களில் 3 ஆவது மகனான பாண்டியராஜன், சினிமா ஆசையில் தாயிடம் சொல்லாமல் குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார்.
எங்கு தேடியும் மகன் கிடைக்காத வேதனையில் இருந்த வரலட்சுமி, 15 ஆண்டுகளுக்குப்பிறகு தனது மகனை இப்போதுதான் சந்தித்துள்ளார். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்னைக்கு வந்த பாண்டியராஜன், சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் செங்குன்றத்தில் பழைய பேப்பர் கடையில் வேலை பார்த்துள்ளார்.
ஊரடங்கால், வேலை இல்லாத காரணத்தால், தாயை தேடி மீண்டும் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். சென்னையில் இருந்து சிறிது தூரம் நடைபயணமாகவும், மீத தூரம் லாரிகளிலும் பயணித்து ஊர் சேர்ந்த சேர்ந்த மகன், 15 ஆண்டுகளுக்குப்பிறகு தாயின் மனதை குளிர்வித்துள்ளார்.