கோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை ! மகனே அடித்துக் கொன்ற கொடூரம்
சேலம் அருகே அப்பாவை மகனே அடித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்க கவுண்டர். வயது 75. விவசாயம் செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே விவசாயி ரங்க கவுண்டர், தனது அரை ஏக்கர் நிலம் மற்றும் 1 லட்ச ரூபாயை கோயில் ஒன்றுக்கு எழுதி வைத்துள்ளார்.
இந்த விஷயம் அவரின் மூத்த மகனான ரமேஷிற்கு தெரியவந்திருக்கிறது. எப்படி தனக்கு தெரியாமல் நிலத்தை கோயிலுக்கு எழுதி வைக்கலாம் எனக் கூறி தந்தையிடம் ரமேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையால் தந்தையின் தலையில் ரமேஷ் ஓங்கி அடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ரங்க கவுண்டர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் போலீசார், ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.