‘நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்’ - உயிருடன் இருக்கும் தாய்க்கு கோவில் கட்டி சிலை வைத்த தனயன்!
கணவர் உயிரிழந்த நிலையில், கூலி வேலை செய்து அரும்பாடுபட்டு தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயை என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, உயிருடன் இருக்கும் தாய்க்கு திருவுருவச் சிலையை தயார் செய்து அதனை அனைவரும் வழிபடும் வகையிலான கோயிலாக எழுப்பி இருக்கிறார் நாமக்கல்லை சேர்ந்த தொழிலாளி பிரபு.
நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருபவர் பிரபு (30). உயிருடன் உள்ள தனது தாய்க்கு கோவில் கட்டி சிலை வைத்துள்ள இவர், அதுகுறித்து கூறுகையில் “கூலித் தொழில் செய்து வந்த என்னோட அப்பா வாசு, கடந்த 2003–இல் உடல் நலக் குறைவு காரணமாக இறந்து விட்டார். அப்போ எனக்கு 10 வயசிருக்கும். என்னோட தங்கை ஜீவாவுக்கு அப்போ 8 வயசு.
தந்தையை இழந்த எங்களை எங்க அம்மா தாய் மணி (48), கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். எங்களை வளர்க்க வீட்டு வேலை, கட்டட வேலை, விவசாய கூலி வேலை என எந்த வேலை கெடச்சாலும் செய்து காப்பாற்றினார். பல்வேறு வகையிலும் துன்பத்தை அனுபவித்த என் தாய் என்னை 10 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதுக்குப் பிறகு அம்மாவுக்கு உதவியா இருக்கலாம்னு வெல்டிங் பட்டறையில வேலைக்கு சேர்ந்தேன்.
அங்க தொழில் பழகுனதுக்கு அப்புறமா கூலிப்பட்டறையிலேயே சொந்தமா வெல்டிங் பட்டறை வெச்சு கடினமா உழைச்சேன். அதன்பிறகு தங்கைக்கு திருமணம் செய்து வெச்சேன். எனக்கும் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கு. இந்த நேரத்துல எங்களை வளர்க்க கஷ்டப்பட்ட அம்மாவை சந்தோஷமா வெச்சிருக்கேன். அவரை என்றும் நினைவில் வைக்க வேண்டும் என்பதற்காக, கூலிப்பட்டி சக்திநகர் 4 சாலை சந்திப்பு அருகே 1500 சதுரடி இடத்தை வாங்கி கோயில் ஒன்றை கட்டி, அதில் எனது அம்மாவின் 3 அடி உயர திருவுருவச் சிலையை வைத்துள்ளேன்.
ஒவ்வொருவரும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை என்றும் மறவாது இருக்க வேண்டும். நம்ம வாழ்நாள் உள்ளவரை அவர்களை நினைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியே இந்த சிலை. சிலையை பார்த்துவிட்டு என் தாய் ஆனந்த கண்ணீர் வடித்தார்” என்றார். அப்போது அவரை இடைமறித்து பேசிய அவரது அம்மா தாய் மணி, “இப்படியொரு மகனை பெற்றெடுத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கணவர் இறந்த பிறகு 20 ஆண்டுகள் கடுமையான போராட்டங்களை சந்தித்து அவர்களை வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளேன்.
இந்த சிலை திறக்கப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே சிலையை தயாரித்து வந்து, யாருக்கும் தெரியாமல் அவனது நண்பர் வீட்டில் வைத்து பாதுகாத்து, தற்போது என் சிலையை, என் மூலமாகவே திறந்து வைத்து பெருமைப் படுத்தியுள்ளான். அவன் ஆயுள் முழுவதும் நலமுடன் வாழ வேண்டும்” என்றார்.