தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் .. பெயர் கூட சொல்லாமல் நிதியுதவி அளித்த நபர்!
பெயர் வெளியிட விருப்பமில்லாமல் தூய்மை பணியாளர்கள் நலனுக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த நபர் குறித்து பிராந்திய துணை ஆணையர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 886ஆக உள்ளது. அதில் 76 பேர் குணமடைந்துள்ள நிலையில் 791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.19 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.
இந்தியாவும் ஊரடங்கு உத்தரவு, வீடுகளுக்குச் சென்று கிருமிநாசினி தெளித்தல் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக தூய்மை பணியாளர்கள் தங்களது பெரும் உழைப்பை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு milaap என்ற இணையப்பக்கம் நிதி திரட்டி வருகிறது. பலரும் இந்தப்பக்கத்தில் நிதி அளித்து வருகின்றனர்.இந்தப்பக்கத்தில் பெயரிட விரும்பாத ஒருவர் ரூ.2 லட்சம் நிதி அளித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள சென்னை மாநகராட்சியின் பிராந்திய துணை ஆணையர், தூய்மை பணியாளர்களுக்கு நிதி திரட்டும் பக்கத்தை நான் பகிர்ந்திருந்தேன். இதுவரை அதில் 8.3 லட்ச ரூபாய் சேர்ந்துள்ளது. அதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்னவென்றால், பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் ரூ.2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.