மாணவியை வழிமறித்து வாயில் விஷம் ஊற்றிய பெண்கள் ?
சென்னை அருகே பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்த மாணவியை வழிமறித்து, வாயில் ரசாயனம் போன்ற திரவத்தை ஊற்றிய 3 பெண்கள் தப்பிச்சென்றனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அப்பகுதியின் புத்தர் தெருவில் உள்ள பள்ளிக்கு செல்வதற்காக அந்த மாணவி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த காரில் இருந்து மூன்று பெண்கள் இறங்கி மாணவியை வழிமறித்துள்ளனர். அப்பெண் பயந்து ஓட முயற்சிக்கவே, அவரை வலுகட்டாயமாக பிடித்துக் கொண்டு வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயற்சித்துள்ளனர்.
16 வயது சிறுமியான அந்த மாணவி வாயில் விஷம் ஊற்றியதால் அதிர்ச்சியடைந்து கூட்டலிட்டுள்ளார். உடனே மூன்று பெண்களும் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணவியின் ரத்த மாதிரியை சோதனைக்கு உட்படுத்த ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வறிக்கை வந்த உடன் சிறுமிக்கு கொடுத்தது விஷமா? அல்லது வேறென்ன என்பது குறித்து தெரியவரும். இதுதொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.