சென்னையில் நிலநடுக்கமா? கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேறியதால் பரபரப்பு!

சென்னையில் நிலநடுக்கமா? கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேறியதால் பரபரப்பு!
சென்னையில் நிலநடுக்கமா? கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேறியதால் பரபரப்பு!

சென்னையில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறி, சில இடங்களில் கட்டடங்களிலிருந்து வேகவேகமாக மக்கள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பலரும் இணையத்தில் பகிர்ந்ததையடுத்து, சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இவ்விஷயத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருகிறார். அவர் கூறுகையில், 'சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வந்தது. விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆய்வு முடிவுகள் வந்தவுடன் தெரிவிக்கிறோம்' என்றார்.

அதேநேரம் இந்திய நிலநடுக்கவியல் மையத்தின் தரவுகளின் படி தற்போதைக்கு நில அதிர்வு எதுவும் தென்னிந்திய பகுதிகளில் ஏற்படவில்லை என தெரிகிறது. இருப்பினும் இணைய செய்திகளினால் சென்னைவாசிகள் பதற்றத்திலேயே உள்ளனர். உண்மையிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதா, அல்லது அருகில் நடந்த ஏதேனும் கடுமையான கட்டட வேலைகளினால் நில அதிர்வு ஏதும் உணரப்பட்டதா என்பது இன்னும் தெரிவரவில்லை.

நேற்றைய தினம்தான் உத்தராகண்ட் மாநிலத்தில் எப்போது வேண்டுமென்றாலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என தேசிய புவி இயற்பியல் ஆய்வு கழகத்தின் தலைமை விஞ்ஞானி பூர்ணசந்திர ராவ் எச்சரித்திருந்தார். நேபாளத்தின் வடக்கு பகுதிக்கும் இமாச்சலப் பிரதேசத்திற்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி ஏற்பட்டிருப்பதாகவும், இதன் தாக்கம் உத்தராகண்டில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால், உத்தராகண்டில் எப்போது வேண்டுமென்றாலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்த பூர்ணசந்திர ராவ், ஆண்டுக்கு 5 சென்டி மீட்டர் அளவுக்கு இந்தியாவின் நிலத்தட்டுக்கள் நகர்ந்து வருவதாக கூறியுள்ளார். இதனால், புவியின் மேற்பரப்பில் அளவுக்கு அதிகமான இடைவெளி ஏற்பட்டு பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்திருந்தார் அவர்.

அப்படியான சலசலப்புக்கு இடையே சென்னைவாசிகள் இன்று நிலநடுக்கத்தை உணர்ந்தாக தெரிவித்தது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ பணிகள் ஏதேனும் நடந்து, அதனால் நில அதிர்வு ஏற்பட்டதா என்ற கேள்வியும் மக்களுக்கு எழுந்தது. இதற்கு மெட்ரோ தரப்பில் “மாதவரம் பசுமை வழி சாலை ஆகிய பகுதிகளில் மட்டுமே மெட்ரோ சுரங்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒயிட்ஸ் ரோடு பகுதிகளில் மெட்ரோ கட்டுமான பணிகளால் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பில்லை” என புதிய தலைமுறையிடம் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com