அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற புதிய பதவியை உருவாக்கியுள்ள தமிழக அரசு, அந்த பதவியில் முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜி-யை நியமித்துள்ளது.
ஏ.எல்.சோமயாஜி 1995ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டவர். 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்துள்ளார். தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான நிலையில், 2013 மார்ச் மாதம் ஏ.எல்.சோமயாஜி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அந்த பதவியில் இருந்த நிலையில் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தற்போது புதிதாக உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பதவியில், முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் அவருக்கு, அரசு தலைமை வழக்கறிஞருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.