சோமஸ்கந்தர் சிலை மோசடி வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சோமஸ்கந்தர் சிலை மோசடி வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சோமஸ்கந்தர் சிலை மோசடி வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
Published on

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கவிதாவின் பணியிடை நீக்க உத்தரவை மறுஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில், சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவரை, தமிழக அரசு, பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியமர்த்த கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். கவிதா தன் மனுவில், நிதி முறைகேட்டுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், 90 நாட்கள் கடந்தும், தனக்கு எதிராக எந்தக் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யாததால், தொடர்ந்து தன்னை பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், கவிதா கைது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்காக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர், சிவகாஞ்சி ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்.

அதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது அரசிற்கும் மனுதாரருக்கும் இடையேயான விவகாரம் எனவும், இதில் சிறப்பு அதிகாரியை தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, உயர்நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவை காரணம் காட்டி இந்து சமய அறிநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான வழக்கு ஆவணங்களை சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தர மறுப்பதாகவும், இதனால் துறை ரீதியான விசாரணை நடத்த முடியவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு தன் வசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும்படி அரசு தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, கவிதாவின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதாவின் பணியிடை நீக்க உத்தரவை நான்கு வாரங்களில் மறு ஆய்வு செய்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி வி.பார்த்திபன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com