சூரிய மின்சக்தி கொள்முதலுக்கான ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
தமிழகத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்படவுள்ள 1,500 மெகாவாட் சூரிய மின் சக்தி கொள்முதல் ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 16 நிறுவனங்களிடம் இருந்து ஆயிரத்து 500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் 47 பைசா என்ற விலையில் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து என்.எல்.சி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துடன் கொள்முதல் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டதாக கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 நிறுவனங்கள் வரும் 30-ம் தேதிக்குள் கையெழுத்திடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நிறுவப்படவுள்ள 1,500 மெகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையங்கள் மூலம் தமிழகத்தில் சூரியசக்தியின் நிறுவுதிறன் 2021-க்குள் 5 ஆயிரம் மெகாவாட் என்ற இலக்கை அடைந்திட வழி ஏற்படும் என அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.