மாணவி ஷோபியா வழக்கில் தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

மாணவி ஷோபியா வழக்கில் தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
மாணவி ஷோபியா வழக்கில் தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தூத்துக்குடி மாணவி ஷோபியா தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் சோபியா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கனடாவிலுள்ள மாண்ட்ரீல் பல்கலையில் படித்து வரும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் கடந்த செப்டம்பர் 3ல் பயணித்தேன். என்னுடன் அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வந்தார். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலர் இறந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. இதனால், விமானத்தில் இருந்து இறங்கும் நேரத்தில் மத்திய அரசை விமர்சித்து கருத்தை தெரிவித்தேன். இதனால், ஆத்திரமடைந்த தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் கடுமையாக நடந்து கொண்டனர். 

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி புதுக்கோட்டை காவல்துறையினர் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, என் மீதான வழக்கில் காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். மேலும் அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சேஷாயி, சோபியா மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டும் வழக்கை ஒத்திவைத்தனர். இதனிடையே சோபியா மீதான வழக்கை விசாரிக்க ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com