வங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்
திருவள்ளூர் ஆர்.கே. பேட்டை அருகேயுள்ள புதூர்மேட்டில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மூலமாக சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் நகைக் கடன் மற்றும் விவசாயக் கடன் பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வங்கிச் செயலாளர் பாரதியிடம் கிராமத்தினர் உடனடியாக தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த ஊழியர்கள் வங்கியில் ஆய்வு நடத்திய போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே நள்ளிரவில் கொள்ளையர்கள் வங்கியின் முன்பக்க கதவின் பூட்டை உடைக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. முன்பக்க கதவின் பூட்டை உடைத்த கொள்ளையர்களால் நகைகள் மற்றும் பணம் வைத்திருக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. பின்பு, வங்கியின் பின்பக்க சுவரை கொள்ளையர்கள் துளையிட முயற்சி செய்துள்ளனர்.
அதிலும் தோல்வி அடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்தக் கொள்ளை முயற்சி தொடர்பாக, வங்கி செயலாளர் பாரதி ஆர்.கே. பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
சிறுகச் சிறுக சேமித்து வாங்கிய நகைகளை அடமானம் வைத்துள்ள கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம், கிராமத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.