அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு!
அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடித்த நபர்கள் மீது இதுவரை சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராயபேட்டை காவல் நிலையத்தில் 2 வழக்குகள், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் 3 வழக்குகள், கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் 3 வழக்குகள், அயனாவரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, ஓட்டேரி காவல் நிலையத்தில் 3 வழக்குகள், பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, ஆவடி காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு 428 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.