
உளுந்தூர்பேட்டை அருகே தன்னை பாம்பு கடித்தது கூட அறியாமல் ஆன்லைன் கேம் விளையாடிய மாணவனை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆ.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்குபாலன் என்பவரின் மகன் மணிகண்டன் (16). இவர், அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், வகுப்பு நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மாணவர்கள் ஆன்லைன் கேம் விளையாட்டில் ஆர்வம் கொண்டு தன்னை முழுமையாக அடிமை படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவன் மணிகண்டன் இன்று ஆ.குன்னத்தூர் குளக்கரையில் உள்ள பாறையில் சாய்ந்தபடி ப்ரீபயர் கேமை மெய்மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பாம்பு ஒன்று மாணவனின் காலில் ஏறி சுற்றியது கூட தெரியாமல் மாணவன் ஆழ்ந்து விளையாட்டில் ஆர்வத்தை செலுத்தினார். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர் மாணவன் காலில் பாம்பு இருப்பதைக் கண்டு அந்த மாணவனிடம் கூறினார். அப்போது காலில் சுற்றியுள்ள பாம்பை கண்டு அலறியடித்துக்கொண்டு எழுந்த மாணவனை பாம்பு கடித்ததில் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து மாணவனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மாணவன் மீது பாம்பு சுற்றி இருந்தது கூட தெரியாமல் மெய்மறந்து ஆன்லைன் கேமில் விளையாடுவதை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.