சாலையில் சென்ற காரில் ஏறிய நல்ல பாம்பு - வைரலாகும் வீடியோ
திருப்பூரில் பி.எம்.டபிள்யூ காருக்குள் பதுங்கிய 6அடி நீள பாம்பை பிடிக்கும் காட்சிகள் வாட்ஸ்அப்பில் வலம் வருகின்றன.
திருப்பூரில் இருந்து முத்தூருக்கு பனியன் கம்பெனி உரிமையாளரும், அவரது சகோதரர் மகனும் தங்களது பி.எம்.டபிள்யூ காரில் சென்றுள்ளனர். கார் காங்கயத்தை கடக்கும்போது, சிறிய குழி என நினைத்து, சாலையில் படுத்திருந்த பாம்பின் மீது காரை ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது பாம்பு காரின் அடிப்பகுதியில் ஏறியுள்ளது.
சிறிது தூரம் சென்றதும், ஓடிக் கொண்டிருந்த காரின் கண்ணாடி முன் பாம்பு படம் எடுத்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் காரை நிறுத்தியுள்ளனர். தகவலையறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்து விட்டு பாம்பு இல்லை என்று கூறிச் சென்றுள்ளனர்.
சந்தேகம் தீராத கார் உரிமையாளர் கோவையில் உள்ள பி.எம்.டபிள்யூ கார் சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு சென்றுள்ளார். அங்கே சோதனையிட்டபோது காரின் அடிப்பகுதியில் சுருண்டு கிடந்த நல்லப் பாம்பை, பாம்பு பிடிக்கும் வல்லுநர் உதவியுடன் உயிருடன் அகற்றினர்.