கன்னிவெடியில் இருந்து தப்பிக்க ராணுவ வீரர்களுக்கு ஸ்மார்ட் ஷூ - நெல்லை மாணவர் அசத்தல் கண்டுபிடிப்பு
செய்தியாளர்: மருது பாண்டி
நெல்லை பாளையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருபவர் பாளை மகிழ்ச்சி நகரைச் சேர்ந்த சாலமோன் டேவிட். இவர், தமிழ்நாடு ஐந்தாம் பட்டாலியன் என்சிசி-யில் இருந்து வருகிறார். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் அபாயகரமான பகுதிகளில் போரில் ஈடுபடும் போது கன்னிவெடிகளில் இருந்து தப்பிக்க மிகவும் வசதியாக வகையில் ஷூ ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அவர் வடிவமைத்துள்ள இந்த ஷூவை ராணுவ வீரர்கள் அணிந்து நடக்கும் போது சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் கன்னிவெடி புதைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்து முன்னெச்சரிக்கையாக செயல்படலாம், அந்த வகையில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு இந்த ஷூ வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவரின் இந்த கண்டுபிடிப்பு அசாத்தியமானது என்பதால் தமிழ்நாடு சார்பாக டெல்லியில் நடைபெற்ற கண்டுபிடிப்புக்கான போட்டியில் கலந்து கொண்டார்.
மொத்தம் 55 பேர் கலந்து கொண்ட போட்டியில், சிறந்த கண்டுபிடிப்புக்கான முதல் பரிசு கிடைத்துள்ளது. இதையடுத்து ஊர்திரும்பிய மாணவரை நெல்லை சரக டிஐஜி மூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.