சேலத்தில் சரோஜா என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில் காஜல் அகர்வால் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
பழைய ரேசன் கார்டுகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் பல்வேறு பிழைகளும், குளறுபடிகள் இருப்பதாக ஆங்காங்கே பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தில் சரோஜா என்ற பெண்மணிக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதை வாங்கி சரோஜா பார்த்தபோது அதில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக அவர் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, அச்சடிக்கும் போது தவறு நேர்ந்திருக்கலாம் என்றும், இ-சேவை மையத்தில் புகைப்படத்தை மாற்றி அச்சிட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.