மெரினா கடற்கரையில் வாகனங்களை நிறுத்த ஸ்மார்ட் பார்க்கிங்
புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்திட ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் முறைக்கு வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
"இப்போது ஒழுங்குடனும் கட்டுப்பாடுடனும் இருப்பது மகிழ்ச்சி" உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினா. இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம். அடுக்கடுக்கான பெருமைகளைக் கொண்ட மெரினா கடற்கரையில் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்காகவும், குடும்பத்துடன் பொழுதுபோக்கிடவும் வருவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். மெரினா கடற்கரையை பராமரித்து வரும் சென்னை மாநகராட்சி, அங்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்திட ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே சென்னை முழுவதும் வாகன நெரிசல் ஏற்படும் பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் அமைத்திட 2019 ஆம் ஆண்டில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தியாகராய நகர் பாண்டிபஜாரில் பன்னடுக்கு வாகன நிறுத்தகம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மெரினா கடற்கரையிலும் ஸ்மார்ட் பார்க்கிங் கொண்டுவரப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 20 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்தும்போது நமது அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்து சேரும். கடற்கரையில் உலாவி முடித்த பின் வாகனங்களை எடுக்கும்போது பார்க்கிங் நேரத்தைக் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.வார நாள்களில் 3,500க்கும் அதிகமான கார்கள், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்கின்றன. வார இறுதி நாட்களில் இது இரண்டு மடங்காகும். தற்போது ஸ்மார்ட் பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல் இன்றி கட்டுப்பாடும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் அனைத்து பகுதிகளிலும், வாகன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற முனைந்து வருகிறது மாநகராட்சி. சென்னையில் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தகங்களிலும் பொது வாகனங்களை நிறுத்திடும் வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. புதிய வாகன நிறுத்த வளாகங்கள் உருவாக்கும் திட்டமும் உள்ளது. இந்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதோடு நற்பெயரையும் வருவாயையும் சம்பாதித்துக் கொடுக்கிறது.