வகுப்புக்கு கட் அடித்த மாணவிகள் - கடத்தப்பட்டதாக நாடகமாடியதால் பரபரப்பு
ஓமலூர் அருகே பள்ளி வகுப்பை கட் அடித்த அரசுப்பள்ளி மாணவிகள் 4 பேர் தங்களை கடத்திவிட்டதாக நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 6ம் வகுப்பை சேர்ந்த 3 பேரும், 7ம் வகுப்பு மாணவி ஒருவரும் நேற்று பள்ளிக்குச் செல்லவில்லை என்பதை, சக மாணவியர் மூலம் அறிந்து கொண்ட பெற்றோர், மாணவியர்களை தேடி பள்ளிக்கு வந்தனர். அப்போது வெள்ளாப்பட்டி சாலையில் ஓடிவந்த மாணவியர் நால்வரும் தங்களை சிலர் கடத்திவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கூறினர். நான்கு மாணவிகளையும் போலீஸார் விசாரிக்கும்போது, நால்வரும் நடந்தே வெள்ளாளப்பட்டி வரை சென்று அங்குள்ள கோயில் நிலத்தில் விளையாடியதும், பெற்றோருக்கு பயந்து, தாங்கள் கடத்தப்பட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. பின்னர் போலீஸார் மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.