“யாரை பற்றியும் அவதூறு பரப்பலாம் என்ற நிலை உருவாகியுள்ளது”: உயர்நீதிமன்றம் கவலை

“யாரை பற்றியும் அவதூறு பரப்பலாம் என்ற நிலை உருவாகியுள்ளது”: உயர்நீதிமன்றம் கவலை

“யாரை பற்றியும் அவதூறு பரப்பலாம் என்ற நிலை உருவாகியுள்ளது”: உயர்நீதிமன்றம் கவலை
Published on

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான மோசடி புகார் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் வகையில் தகவல் பரப்பப்படுவது ஏற்புடையதல்ல என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிண்ட்டன் டாவ்சன் என்பவரின் புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.சதீஸ்குமார் விசாரித்து வருகிறார்.

இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. சிபிசிஐடி வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஜெகத்ரட்சகனின் மகன், மகள் ஆகியோர் செப்டம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானதாகவும், காவல்துறை கோரியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும், ஆவணங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கவும் 2 வாரம் அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கிற்காக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

அதற்கு அவகாசம் வழங்கிய நீதிபதி சதீஷ்குமார் வழக்கை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை ஜெகத்ரட்சகனை தொந்தரவு செய்யக்கூடாது என்ற உத்தரவையும் நீட்டித்தார். அப்போது நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தகவல்கள் பரப்பப்படுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்ததுடன், அது ஏற்புடையதல்ல என எச்சரித்ததுடன், அவற்றை பற்றி தான் கருத்தில் கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும், சமீபகாலங்களில் யார் வேண்டுமானாலும் யாரை பற்றியும் அவதூறை பரப்பலாம் என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com